திருப்பாவை
மார்கழி
மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். ஆண்டாள் அருளியுள்ள
முப்பது பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பினை பாடுவதும், ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு நாள்
என்று பாடலின் விரிவான விளக்கங்களை சிந்தித்து மார்கழி மாதத்தில் களிப்பதும், பெருமாள்
கோயிலில் தவறாமல் நடைபெறும் நிகழ்சிகள். மேலும் இந்த முப்பது பாடல்களையும் படிக்கும்
கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.
கண்ணபிரானையே தனது கணவனாக வரித்து அவனுடன் சேரும் நாள் எப்போதோ என்ற ஏக்கத்தில் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களை பாடிய ஆண்டாள், ஒருநாள் திருவரங்கம் கோயிலில் பெருமாளுடன் கலந்துவிடுகின்றார். தன்னை ஆய்ப்பாடி பெண்களில் ஒருத்தியாக நினைத்துக்கொண்டு, மற்ற ஆயர்பாடி பெண்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்பதாக கற்பனை செய்யும் பாடல்கள் கொண்ட இனிய பாசுரம். |
மார்கழி1- பாடல்+பொருள்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க
ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல
நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும்
அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம்
போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான
முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
மார்கழி-2 பாடல்+பொருள்
நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்:
பாடல்:
வையத்து
வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம்,
நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு
நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம்,
தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும்
கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!
பொருள்:
பொருள்:
"இப்பூமியில்
வாழ்பவர்களே, திருப்பாற்கடலுள் அரிதுயில் செய்கின்ற பரமனின் திருவடிகளை அன்புடன்பாடி,
நெய் உண்ணாது, பால் பருகாது, விடியற்காலை நீராடி, கண்களுக்கு மை இடாமல், தலையில் பூ
சூடாமல், செய்யக்கூடாதவற்றைச்செய்யாமல், பொய் பேசாது, பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும்
தம்மால் இயன்ற அளவு வழங்கி, நாம் உய்யும் வகையை நாடி, மகிழ்ந்து, நாமும் நம் நோன்புக்கு
மேற்கொள்ளும் செயல்களைக்கேளீர்!"
மார்கழி- 3 பொருள்+விளக்கம்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்
மார்கழி – 4 பொருள்+பாடல்
மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்
ஆழிமழைக்கண்ணா! ஒன்றும் நீ கைகரவேல்
ஆழிமழைக்கண்ணா! ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கருத்து
பாழியந்தோளுடை பத்பநாபன் கையில்
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுழைத்த சரமழைபோல்
வாழஉலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்
விளக்கம்:
"மழை பொழிவதற்கு காரணக்கடவுளான கண்ணா! உன் மழையாகிய குடையில் சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு, ஆகாயம் முழுதும் பரவி, திருமாலின் கருமேனி போன்று நிறம்பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையும், திருமாலின் வலக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சுரதர்சன சக்கரம் போல் பிரகாச ஒளி வீசிக்கொண்டு, அவனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லால் எய்தப்பட்ட அம்பு மழைபோல், உலகமக்கள் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், சரமாரியாக மழை பொழிய வேண்டுகிறோம்."
மார்கழி-5 பாடல் + விளக்கம்
கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும்
மாயனை மன்னுவட மதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.
விளக்கம்:
விளக்கம்:
"மாயனும்
தெய்வத்தன்மை பொருந்திய வட மதுரையில் உதித்தவனும், சுத்தமான நீர் நிரம்பிய யமுனைக்கரையில்
விளங்குபவனும், ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்கு போன்றவனும், தேவகியை பெருமைப்படுத்தியும்,
யசோதைக்கு சிறு மணிக்கயிற்றால் கட்டுண்ட வயிற்றைக் காட்டி சந்தோஷப்படுத்தியவனுமான கண்ணனை,
உள்ளும் புறமும் பரிசுத்தமாய் வந்து, வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து, உடலால்
வணங்கி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், முற்பிறவிப்பாவங்களும், அறியாமல்
வருகின்ற பாவங்களும், நெருப்பில் விழுந்த பஞ்சு போல் அழிந்து போகும். எனவே, அவன் திருநாமங்களை
சதா ஓதிக்கொண்டிருத்தல் வேண்டும்."
மார்கழி-6 பாடல் + விளக்கம்
பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்
விளக்கம்:
"உறங்கும் பெண்ணே! பறவைக் கூட்டங்கள் எழுப்பும் சப்தத்தை கேட்டாயோ? கருடனை வாஹனமாகக்கொண்ட விஷ்ணுவின் ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சிக்கு அனைவரையும் அழைக்கும் சங்கின் பெரிய சப்தத்தை நீ கேட்கவில்லையோ? இளம் பெண்ணே! எழுந்திருப்பாயாக. பூதனா என்னும் அரக்கி, தாய் உருவம் கொண்டு, தனது முலைகளில் நஞ்சு தடவிக்கொண்டு, கண்ணனுக்குப் பால் ஊட்டுகையில், அதை அறிந்த கண்ணன், பாலையும் அவள் அளித்த விஷத்தையும் உண்டு, அந்த அரக்கியின் உயிரையும் குடித்தான். பின்னர், வஞ்சனையுடன் வண்டி உருவில் வந்து கண்ணன் மேல் சாய்ந்து கொல்ல முயன்ற சகடாகரன் என்னும் அரக்கனை, தன் சிறு கால்களால் உதைத்து, அவ்வண்டியைக்கவிழ்த்து, அவ்வசுரனைக்கொன்றவனும், திருப்பாற்கடலில் பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவை முனிவர்களும் யோகிகளும் தங்கள் உள்ளத்தில் அவனை நினைத்துக்கொண்டு, 'ஹரி, ஹரி' என்று எழுப்பும் பேரொலி, எங்கள் உள்ளத்தில் புகுந்து, குளிர்ந்துள்ளது. அதனைக்கேட்க, நீயும் எழுந்திராய்!
மார்கழி--7 பாடல் + விளக்கம்
பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும், தயிற்கடையும்
ஓசையும், நாங்கள் பாடுபவதும் கேட்டும் இன்னும் படுத்துரங்கலாகுமோ?
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.
விளக்கம்:
விளக்கம்:
கீசு கீசு என்று, ஆனைச்சாத்தன் பறவைகள் எழுப்பும்
பேரொலி உனக்கு கேட்கவில்லையா, பேதைப்பெண்ணே! வாசனை வீசும் கூந்தலையுடைய இடைச்சிமார்கள்,
தங்கள் தாலிகள் தள தள என்று ஒலிக்க, மத்தினால் கைகளை மாற்றி மாற்றி தயிர் கடையும் சப்தத்தை
கேட்டிலையோ? நம் பெண்கள் கூட்டத்துக்கு தலைமையானவளே! நாராயணனின் திரு அவதாரமான (கேசவன்
என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ?
முகத்தில் பிரகாசம் ஜொலிக்கும் பெண்ணே! எழுந்து கதவைத்திற!
மார்கழி- 8 பாடல் + விளக்கம்
கண்ணனிடமிருந்து
நாம் விரும்புவதை அடையும் வழி:
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளநதானை
மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!
விளக்கம்:
"பெருமகிழ்ச்சியுடன் விளங்கும் பெண்ணே! கீழ்த்திசையில்
வானம் வெளுத்துள்ளது. எருமைகள் பனி படர்ந்த புல்வேலிகளில் மேய்வதைப்பார்! பாவை நோன்புக்கு
கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் அழைத்துச்செல்ல உன் வாசலில் வந்து
நின்றோம். இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்னும் அரக்கனின் வாயைப்பிளந்தவனும்,
கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் என்னும்) மல்லர்களை மாளச்செய்தவனும், தேவாதி
தேவர்களுக்கெனல்லாம் தலைவனான கண்ணனின் மகிமையைப்பாடி, அவனை நாம் வணங்கினால், நம் குறைகளை
மன்னித்து, அருள் புரிவான். எனவே எழுந்திராய்!"
மார்கழி - 9 பாடல்+விளக்கம்
மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்!
தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!
விளக்கம்:
"மாசற்ற வைரங்கள் பொறுத்தப்பட்ட மாளிகையில்
நான்கு புறமும் தீபங்கள் எரிய, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் துயிலுரும்
மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுரும் உங்கள் மகளை எழுப்ப
மாட்டீர்களோ? தங்கள் மகள் ஊமையோ அல்லது செவிடோ? சோம்பிப் பெருந்தூக்கம் உடையவளோ? அல்லது,
எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளாளோ?
இப்பெண்ணை எழுப்புவதற்கு 'வியக்கத்தக்க விசேஷ குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் வாழ்பவனே,
மஹாலக்ஷ்மியின் நாயகனே' என எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை சொல்வோம்."
மார்கழி- 10 பாடல் + விளக்கம்
பெருந்தூக்கம்
தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ
வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் ப்ண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்!
விளக்கம்:
"நோன்பு நோற்றுச் சுவர்க்கம் அடைய விரும்பிய
பெண்ணே! வாசல் கதவைத்திறக்காவிட்டாலும் ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? மணம் பொருந்திய
துளசி மாலையை அணிந்த முடியை உடையவனும், அனைத்து உயிர்களை காப்பவனும், நம்மால் வணங்கப்பட்டு
நமக்கு வேண்டிய பலன்களைத் தரும் தர்ம பரிபாலகனுமான நாராயணனால் ராமவதாரத்தில் வதம் செய்யப்பட்ட
கும்பகர்ணன், தனக்கே உடமையாகிய பெருந்தூக்கத்தை உன்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டானோ?
மிகுந்த சோம்பலும் உறக்கமும் உடையவளே! எங்களுக்கு அணி போன்றவளே! தூக்கம் தெளிந்து,
கதவைத் திறப்பாயாக!"
மார்கழி 11 பாடல்
+ விளக்கம்
அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம்
என்ன?
கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து
கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார்திறல் அழியச்சென்று
செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"கன்றுகளை
ஈன்ற பசுக்களை கறப்பவர்களும், பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புறிபவர்களும்
ஆன குற்றமற்ற இடையர் குலத்தில் பிறந்த கொடி போன்ற அழகிய வடிவையுடயவளே! பாம்பைப் போன்ற
மெல்லிடை உடையவளும், மயில் போன்ற சாயலையும் உடையவளே! மேகம் போன்ற வண்ணக்கண்ணனின் புகழை
பாடிக்கொண்டு ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்துவந்து, உன் வீட்டின்
முன்னர் வந்து குழுமியிருந்தும், செல்வ சீமாட்டி நீ, சிறிதும் அசையாமலும் பேசாமலும்
உறங்குவதன் பொருள் என்ன?"
மார்கழி 12 -
பாடல்+விளக்கம்
விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன்
வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலை கேட்டும் உறங்குவதேன்?
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு
இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்து கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"இளங்கன்றுகளுடைய எருமைகள், பால் கறப்பார் இல்லாமையால், தன் முலைக்காம்புகள் கடுத்து, தன் கன்றுகளை நினைத்து, முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, அதனால் வீடு முழுவதும் ஈரமாகி, சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் இல்லத்து தலைவனின் தங்கையே! சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால் சினம் கொண்டு, இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற மனத்திற்கினிய ராமனின் திருப்புகழை, பனித்துளிகள் எங்கள் தலையில் விழ உன் மாளிகையின் வாசத்தூணைப்பற்றிக்கொண்டு, நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ எழுந்த பாடில்லையே! ஊரில் இருப்போர் அனைவரும் எழுந்துவிட்டபின்னரும் நீ எழவில்லையே! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருளென்ன?"
மார்கழி 13 - பாடல்+விளக்கம்
படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா!
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுழங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.
விளக்கம்:
விளக்கம்:
"பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைப்பிளந்து
கொன்ற கண்ணன் மற்றும், இராவணனுடைய பத்துத்தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த
ராமனுடைய கீர்த்திகளையும் பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நூற்க குறித்த
இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர். (சுக்கிரன்) வெள்ளிக்கிரகம் உச்சிக்கு வந்து, வியாழன்
(பிரஹஸ்பதி) மறைந்துவிட்டது. மேலும் காலைப்பறவைகள் ஒலித்துப் பறந்து செல்லும் சப்தம்
உனக்கு காதில் கேட்கவில்லையா? சிவந்த தாமரைப் போன்ற கண்களையுடையவளே! இந்நன்னாளில் தூங்குவதுபோல
கண்களை மூடிக்கொண்டு பாவனை செய்வதை விட்டுவிட்டு, எங்களுடன் குளிர்ந்த நீரில் அமிழ்ந்து
முழுகாமல், படுக்கையில் உறங்குகிறாயே பாவைப்பெண்ணே! எழுந்து வா."
மார்கழி 14 - பாடல்+பொருள்
எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது
தூங்குதல் முறையோ?
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்து தடாகத்துள்
செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து, கருநெய்தல் மலர்கள் பூத்துக் குவிந்துள்ளன. காவியுடை
தரித்த வெண் பற்களையுடைய தவசிகள், தங்கள் திருக்கோயில்களைத் திறக்க செல்லுகின்றனர்.
பெண்ணே! நீ எங்களை முன்னரே எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாமலிருந்தும்
செய்யவில்லையே என்ற நாணம் துளியும் இல்லாதவளே! பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுபவளே!
சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான
கண்ணபிரானின் பெருமைகளைப்பாட எழுந்திருப்பாயாக!"
மார்கழி 15 - பாடல்+பொருள்
எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து
மாயனைப்பாட எழுந்துவா!
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோரெம்பாவாய்.
விளக்கம்:
குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்.
[எழுப்புபவர்] "இளங்கிளி போன்ற சொற்களையுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"
[எழுந்திருப்பவர்] "என் தோழிகளே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னை எழுப்பாதீர்கள்". புறப்பட்டு வருகின்றேன்"
[எழுப்புபவர்] "பேச்சு வன்மையுள்ள உன் உறுதிமொழியையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் நன்கு அறிவோமே"
[எழுந்திருப்பவர்] "நீங்கள்தான் பேச்சுத்திறமையுடையவர்கள். அல்லது, நீங்கள்
கூறும்படி நானே வல்லவளாக இருக்கட்டும்"
[எழுப்புபவர்] "சீக்கிரம் எழுந்துவந்து எங்களுடன் கலந்து கொள். வேறு எதை நினைத்து, இன்னும் எழுந்திராமல் இருக்கிறாய்?"
[எழுந்திருப்பவர்] "எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?"
[எழுப்புபவர்] "எல்லாரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் என்னும் பகைவர்களின் க்ர்வத்தை அழித்து, நம் அனைவரையும் மாயையில் வீழ்த்துபவனின் புகழைப் பாட காலம் தாமதியாது விரைவில் எழுந்துவா."
[எழுப்புபவர்] "சீக்கிரம் எழுந்துவந்து எங்களுடன் கலந்து கொள். வேறு எதை நினைத்து, இன்னும் எழுந்திராமல் இருக்கிறாய்?"
[எழுந்திருப்பவர்] "எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?"
[எழுப்புபவர்] "எல்லாரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் என்னும் பகைவர்களின் க்ர்வத்தை அழித்து, நம் அனைவரையும் மாயையில் வீழ்த்துபவனின் புகழைப் பாட காலம் தாமதியாது விரைவில் எழுந்துவா."
மார்கழி 16- பொருள்+பாடல்
பாவயர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை
கதவைத்திறக்க வேண்டுதல்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பனே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.
விளக்கம்:
சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரையெழுப்பிய பாடல்களைக் கண்டோம். இப்பாடலில் பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க சொல்லுகின்றனர்.
"அனைவருக்கும் தலைவனான ஸ்ரீ நந்தகோபனுடைய கோயிலைக்காப்பானே!
கொடிகளுடன் விளங்கும் தோரண வாயிலைக் காப்பானே! தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு!
ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு நேற்றே, அனைவரையும் மயக்கும் நீல மணிபோன்ற நிறத்தையுடைய
கண்ணபிரான், பறையை (மத்தளம்) தருகிறேனென்று வாக்களித்துள்ளான். எனவே, அவனைத் தூக்கத்திலிருந்து
எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாடுவதற்கு தூய்மையுடன் வந்துள்ளோம். எனவே மறுக்காமல்,
வாசல் படியோடு சேர்ந்துள்ள கதவைத் திறந்து எங்களை உள்ளேவிடு!"
மார்கழி 17- பாடல்+பொருள்
கதவு திறந்திடவும், கோபியர் உள்ளே சென்று, நந்தகோபனையும்,
யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பிரான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத்தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்.
விளக்கம்:
வாயில் காப்போன் கதவைத்திறந்து, பெண்மணிகைகளை உள்ளே விட, முதற்கட்டில் சென்று, பள்ளீகொண்டிருக்கும் கண்ணன், யசோதை, பலதேவர் மூவரையும் எழுப்புகின்றனர்.
"பல விதமான ஆடைகளையும், குளிர்ந்த பானங்களையும்,
பல்வகை உணவுப்பண்டங்களையும் வாரி வழங்கும் எங்கள் பெருமான் நந்தகோபரே, தாங்கள் எழுந்திருக்கவேண்டும்.
வஞ்சிக் கொடியையொத்த பெண்களுக்கெல்லாம் தலைவியானவளும், நந்த குலத்திற்கு தீபம் போன்றவளும்,
ஸ்ரீ கிருஷ்ணரை எங்களுக்களித்த யசோதை பிராட்டியே, எழுந்தருளாய்! வானளாவி ஓங்கி வளர்ந்து
அனைத்துலகங்களையும் அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே! பொன்னால் இழைக்கப்பட்ட வீரக்கழலை
அணிந்த திருவடிகளையுடைய செல்வா! பலதேவா! உன் தம்பியான கண்ணனும் நீயும் இனியும் உறங்காது
எழுந்தருளவேண்டும்."
மார்கழி 18- பாடல்+பொருள்
நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன்மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"மதம் கொண்ட யானையைப்போல வலிமையுடையவரும்,
படைவரைக்கண்டு பின்வாங்காத தோள்வலிமையுடையவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும்
கூந்தலுள்ள நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத்திற! கோழிகள் கூவுவதைக்கேள்!
கொடிகள் படர்ந்த பந்தல் மேலமர்ந்து, குயில்கள் கூவுவதைக்கேள்! மென்மையான விரல்களையுடையவளே!
உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் பாட வந்துள்ளோம். எனவே உன் சிவந்த தாமரைப் பூக்கள்
போன்ற மெதுவான கையினால், கைவளையல்கள் ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறவாய்!"
மார்கழி 19- பாடல்+பொருள்
நப்பின்னை பிராட்டியையும்
கண்ணனையும் எழுப்புதல்
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"நான்கு புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு,
குளுமை, மிருதுத் தன்மை, நறுமணம், வெண்மை ஆகிய ஐந்து குணங்களையுடய, தந்தத்தினால் ஆன
மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை
பிராட்டியின் மார்பினில் தலைசாய்த்து உறங்கும் கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தை
பேசு! (பின்னர் நப்பின்னை பிராட்டியை நோக்கி) மை தீட்டிய அகலமான கண்களையுடையவளே,நீ
உன் கணவனான கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுவதில்லை.
ஒரு நொடியும் அவனது பிரிவைத் தாங்காத நப்பின்னை பிராட்டியே! இது உன் இயற்கைக்கும் குணத்திற்கும்
ஒத்துவராது."
மார்கழி 20- பாடல்+பொருள்
கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கும், அவர்களுக்கு
துன்பம் நெருங்குவதற்கு முன்னரே அவர்களைக்காக்கும் கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த
காரியத்தை நிறைவுறச்செய்பவனே! பகைவரை அடக்கும் வலிமையுடையவனே! பகைவருக்கு துன்பங்களைக்கொடுப்பவனே!
உறக்கம் நீங்கி எழுந்துவாராய்! செப்பைப்போன்ற மென்மையான மார்பகங்களையும், சிறு இடையையும்
உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! தூக்கத்திலிருந்து எழுந்து வந்து,
எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் தந்து, உங்கள் மணாவாளனான
கண்ணனையும் எங்களுக்களித்து நாங்கள் நீராடச்செய்வாயாக!"
மார்கழி 21- பாடல்+பொருள்
உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!"
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"சுரந்த பாலை ஏந்திய குடங்கள் பொங்கி வழிய, இடைவிடாது வள்ளலைப் போன்று பால் சுரக்கும் பசுக்களை அதிக அளவில் படைத்த நந்த கோபனின் மகனே! நீ எழுந்திருப்பாயாக! பக்தர்களை காத்து அருள்பவனே! அனைவராலும் அறியப்பட்டிருக்கும் பெருமை வாய்ந்தவனே! பூமியில் அவதாரம் செய்த ஒளி உருவானவனே! படுக்கையிலிருந்து எழுந்திரு! உன் வலிமையினைக் கண்டு தங்கள் வலிமையை இழந்து, உன் மாளிகை வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் விழும் பகைவர்களைப்போல உன்னை புகழ்ந்து கொண்டு, துதித்து, உன் திருமாளிகைக்கு வந்துள்ளோம்!"
மார்கழி 22- பாடல்+பொருள்
கண்ணை விழித்து,
செந்தாமலர்க் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிருப்பார் போல்வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்.
விளக்கம்:
"பரந்த
பூமியை ஆண்ட மன்னர்கள், தமக்கு மேம்பட்டவர்கள் யாரும் இல்லை என்னும் கர்வம் அடக்கப்பட்டு,
இங்கு வந்து உன் அரியாசனத்தின் கீழ் சங்கமிருப்பது போல நாங்களும் இங்கு வந்தடைந்தோம்.
எனவே, கிண்கிணி சதங்கைப்போலே, பாதி மலர்ந்த செந்தாமலரைப் போன்று உன் சிவந்த கண்கள்
எங்கள் மேல் விழிக்கலாகாதோ? சந்திர, சூர்யர்களைப்போன்ற அவ்விழிகள் எங்கள் மேல் விழுமாகில்
எங்களின் அனைத்து பாபங்களும் கழிந்து விடும்."
மார்கழி 23- பாடல்+பொருள்
எங்கள் குறைகளை
கேட்டு, அருள் புரிவாயாக
மாரிமலை முழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீறரியசிங்க்ச்ம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டுப்
போத்ருமா போலே நீ, பூவைப் பூ வண்ணா!உன்
கோயில் நின்ற் இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம்
ஆராய்ந்து அருள் ஏலோரெம்பாவாய்.
விளக்கம்:
"மழைக் காலத்தில், பெண் சிங்கத்துடன் உறங்கிகொண்டிருக்கும்
ஆண் சிங்கம், தூக்கம் தெளிந்து எழுந்துவந்து, தீக்கதிர்கள் பறக்கும் தன் கண்களை விழித்து,
பிடரி மயிர் நாற் பக்கமும் படரும்படி எழுந்து உடம்பை அசைத்து, கம்பீரமாக பேரொலி எழுப்பி
குகையிலிருந்து புறப்படுவது போல, நீயும் உன் கோவிலிலிருந்து கிளம்பி, இம்மண்டபத்திற்க்கு
எழுந்தருளி, வேலைப்பாடுகள் மிகுந்த அரியணையில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியங்களை கேட்டறிந்து
அருள் செய்வாயாக!"
மார்கழி 24- பாடல்+பொருள்
உனக்கே மங்களம்
உண்டாகுக!
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்று அங்குத்தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச்சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலாய் எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இறங்கு ஏலோர் எம்பாவாய்!
விளக்கம்:
"இந்திரனை மஹாபலி துன்புற்றிய காலத்தில், இவ்வுலகங்களை
இரண்டடியால் அளந்தவனே! உன் திருவடிகளுக்கு மங்களம். சீதையைத் தேடிப் போய் தென் இலங்கையை
அழித்தாய்! உன் திருத்தோள் வலிமைக்கு மகிமையுண்டாகுக. வண்டி உருவில் வந்த சகடாசிரனை
உதைத்து வெற்றி கொண்டவனே, உன் புகழ் ஓங்கட்டும். கன்று வடிவாக வ்ந்த அரக்கனை, எரிகருவியாகக்
கொண்டு விளாமர வடிவாக வந்த அரக்கனையும் கொன்றவனே! உன் திருவடிகளுக்கு மங்களம். கோவர்த்தன
மலையை குடையாகப் பிடித்து கோவலர்களைக் காத்தவனே! உனக்கு மங்களம். பகைவரை அழிக்கும்
உன் வேலுக்கு மங்களம். எப்பொழுதும் உன் வீர செயல்களைக் கூறி, எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள
நாங்கள் இங்கு வந்தோம். எங்களுக்கு கருணை புரிவாயாக!"
மார்கழி 25- பாடல்+பொருள்
உன்னைப் பிரிந்து
யான்படும் துயர் நீக்குவாய்!
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்
மார்கழி 26- பாடல்+பொருள்
மார்கழி நீராட
தேவையான பொருள்களை அளிப்பாயாக!
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல் வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.
பொருள்:
"பக்தர்களை உன்மீது மயக்கங்கொள்ளச்செய்தவனே! நீல மணி போன்ற நிறத்தையுடையவனும், யாதவ குலவிளக்கு போன்றவனும், ஆலின் இலையில் துயில்பவனுமான கண்ணனே! நாங்கள் மேற்கொள்ளயிருக்கும் நோன்புக்கு தேவையான பால் போன்ற நிறமுடைய, உன் இடக்கையில் உள்ள பஞ்சசன்னியத்தை ஒத்த சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்ககளையும், பல்லாண்டு பாடுபவர்களையும், தீபங்களையும், கொடிகளையும் நீ எங்களுக்கு அருள் புரிந்து அளிப்பாயாக!"
மார்கழி 27- பாடல்+பொருள்
நோன்பு செய்ய
அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன?
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே, பாற்சோறு
மூடநெய் பெய்து, முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்:
"பகைவர்களை
வெல்லும் கோவிந்தா! உன் புகழைப் பாடி பறையைப் பெற்று, பின் நாங்கள் இன்னும் உன்னிடத்து
பெறவிரும்பும் பரிசுகள் யாவையெனில், அனைவரும் புகழத்தக்க முன் கையில் அணியும் வளைகளும்,
தோளுக்கு இடும் ஆபரணங்களும், தோடும், காதணிகளும், காலில் அணியும் ஆபரணங்களும், புதிய
ஆடைகளும் ஆவன. இவைகளப் பெற்று புத்தாடைகளையணிந்து பால் சோறு மூடும்படி நெய் பரிமாறி,
அவற்றை முழங்கையிலிருந்து வழியும்படி உண்டு, உன்னுடன் நாங்கள் கூடி, இன்புற்றிருந்து,
குளிர வேண்டும். இவ்வாறாக எமது நோன்பு முடிவடைதல் வேண்டும்."
மார்கழி 28- பொருள்+பாடல்
சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களை கோபிக்காது, எங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வாயாக!
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
பொருள்:
"பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று
கூடி உண்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவும் படைத்த நாங்கள், ஆயர்குலத்தினில் பிறந்த
உன்னை எங்கள் குலத்தவனாக பெற்றடைய பெரும் புண்ணியத்தை செய்துள்ளோம். யாதொரு குறைவும்
இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக்கொண்ட கண்ணனே! உன்னுடன் எங்களுக்கு ஏற்ப்பட்ட
உறவை, யாராலும் அழிக்க முடியாதது. அற்ப அறிவைப் பெற்ற சிறுமியரான நாங்கள், உன்னிடம்
கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மதவன் போன்ற) சிறிய பெயர்களினால்
அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களைத் தந்து அருள வேண்டும்."
மார்கழி - 29 பாடல் + விளக்கம்
உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள்
மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக!
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மெய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
விளக்கம்;
"விடியற்காலையில் உன்னை வழிபட்டு, உன் தாமரை
மலரைப் போன்ற மென்மையான திருவடிகளைப் போற்றி நாங்கள் விரும்பியவைகளைக் கொடுத்து அருள்
செய்யவேண்டும். பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் எங்களைப் போன்றே
அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது.
உன்னிடமிருந்து, பறை வாத்தியம் போன்ற பொருள்களைப் பெற்றுக் கொண்டவுடன், உன்னை விட்டு
அகல நாங்கள் இங்கு வரவில்லை. காலம் உள்ளவரை, மேலும் மேலும் மீண்டும் பிறவியெடுப்பினும்,
உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். உன் மீது
அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் ஆசையை தவிர்தருள
வேண்டும்."
மார்கழி 30 பாடல் + விளக்கம்
இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்ட வாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று என்புறுவரெம்பாவாய்
விளக்கம்:
" திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம்
தந்தருளிய கண்ணபிரானை, கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனை, பூர்ண சந்திரன் போன்ற முகத்தையுடைவனை,
ஆபரணங்களை அணிந்த ஆயர்பாடி மகளிரை பறை என்ற பெயரில் அடிமையாக்கிக் கொண்ட கண்ணனின் வரலாற்றை,
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த புதிய தாமரை மலர்களாலான மாலையை உடுத்திய அந்தணருமான
பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளால் அருளிச் செய்த தமிழ் பாமாலை முப்பது பாடல்களையும்
தவறாமல் ஆர்வத்துடன் உள்ளத்தூய்மையுடன் பாடுபவர்கள், மாலையணிந்த நான்கு திருத்தோள்களையும்,
சிவந்த கண்களையும், அழகிய முகத்தையும் எல்லா செல்வங்களையும் உடைய திருமகளை நாதனாய்
பெற்ற ஸ்ரீமன் நாராயணின் திருவருள் பெற்று, எப்பொழுதும், எவ்வித குறையுமின்றி பேரின்பத்துடன்
வாழ்வார்கள்."
இத்துடன் திருப்பாவை முற்றிற்று.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment